நெகிழ்ச்சி... 120 வருடங்களாக பங்குனி உத்திர விழாவில் பங்கேற்கும் முஸ்லிம் மக்கள்!

 
பங்குனி உத்திரம் முஸ்லிம்

கடந்த 120 வருடங்களாக பங்குனி உத்திர திருவிழாவில் முஸ்லிம் மக்கள் பங்கேற்று மத நல்லிணக்கத்தைப் பேணி வருகின்றனர். சுற்றுவட்டார பகுதி மக்கள் அனைவருமே இந்நிகழ்வு குறித்து அத்தனைப் பெருமிதமாக பேசிக் கொள்கிறார்கள். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குருசாமிபாளையம் கிராமத்தில் கடந்த 120 வருடங்களாகத் தொடர்ந்து மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் நடைபெறும் இந்து, முஸ்லிம் மக்கள் பங்கேற்கும் பங்குனி உத்திர திருவிழா நிகழ்ச்சி அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. 

பங்குனி உத்திரம் முஸ்லிம்

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காகவே வேலை நிமித்தமாகவோ, திருமணமாகியோ வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்றிருக்கும் முஸ்லிம் மக்கள் கூட, இந்த நாளில் நாமக்கல் மாவட்டம், குருசாமி பாளையம்  கிராமத்திற்கு தங்களின் வேர்களை மறக்காமல் வந்து விடுகின்றனர்.

நாமக்கல், ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம் கிராமத்தில் சிவசுப்ரமணியர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோயிலின் பங்குனி உத்திர தேர்த்திருவிழா வெகு விமரிசையாக ஒவ்வொரு நாளும் நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு பங்குனி உத்திர திருவிழா நாளை மார்ச் 25ம் தேதி நிறைவு பெறுகிறது. விழாவின் கடைசி நாளில் இந்து, முஸ்லிம் சமுதாய மக்கள் ஒன்று கூடி சந்தனம் பூசிக் கொள்ளும் மத நல்லிணக்க நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

ஒவ்வொரு வருடமும் ராசிபுரம் கிழக்கு தெரு பள்ளிவாசலைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் குருசாமிபாளையம் செல்கிறார்கள். அங்கு சிவசுப்ரமணியர் கோயிலில் இருந்து வெள்ளை கொடி ஏந்தி, மேளம் வாத்தியம் முழங்க அங்குள்ள குடியிருப்பு மற்றும் கடைகளின் சுவர்களில் முஸ்லிம் மக்கள் சந்தனத்தை பூசி, பின்னர், கோயில் அருகே செங்குந்தர் பாவடி மைதானத்தில் உள்ள புளிய மரத்தில் வெள்ளைக் கொடியை ஏற்றுகின்றனர்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து ஊர் பெரியதனக்காரர் கைகளில் முஸ்லிம் மக்கள் சந்தனம் பூசுவார்கள். அவரும் அவர்களின் கைகளில் பதிலுக்கு சந்தனம் பூசுவார். இதைத் தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் பூ மாலையை மாற்றிக் கொண்ட பின்னர், பா்த்தியா ஓதிய முஸ்லிம்கள் அங்கிருந்த இந்து மக்களுக்கு நாட்டுச் சர்க்கரை கலந்த பொட்டுக் கடலையை வழங்குகிறார்கள். பொட்டுக்கடலையை பிரசாதமாக வாங்கிக் கொள்ளும் இந்து மக்கள், இதைத்தொடர்ந்து முஸ்லிம் மக்களுக்கு விருந்து கொடுத்து உபசரிக்கின்றனர். 

பங்குனி உத்திரம் முஸ்லிம்

இதுகுறித்து குருசாமிபாளையம் மக்கள் கூறுகையில், "குருசாமிபாளையம் பகுதியில், கைத்தறி நெசவு தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த தொழிலுக்கு அச்சு கட்டி கொடுக்கும் தொழிலை ராசிபுரத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் செய்து வருகின்றனர். இச்சூழலில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் ஃபிளேக் நோயால் கிராம மக்கள் மக்கள் பாதிபிற்குள்ளாகினர்.

அப்போது, முஸ்லிம் பெரியவர்கள், சென்டா மரம் என அழைக்கப்படும் புளிய மரத்தின் கீழ் நின்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு பாத்தியா ஓதி பொட்டுக் கடலை மற்றும் நாட்டு சர்க்கரை கொடுத்தனர். அதனால் நோய் குணமானதாக முன்னோர்கள் தெரிவிப்பர். அது முதல் முஸ்லிம் மக்களுக்கு மரியாதை செய்யும் வகையில் பங்குனி உத்திரத் திருவிழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன் குருசாமிபாளையம் ஊர் பெரியவர்கள், ராசிபுரம் அச்சு கட்டித்தெரு கிழக்கு பள்ளிவாசலுக்கு தேங்காய் பழம் தட்டுடன் சென்று திருவிழாவுக்கு அழைப்பு விடுப்பர். அதையடுத்து அவர்கள் விழாவில் கலந்து கொண்டு மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் சந்தனம் பூசிக் கொள்வர். இந்த விழா கடந்த 120 வருடங்களாகத் தொடர்ந்து எங்கள் கிராமத்தின் மத நல்லிணக்கத்தை மற்ற கிராமத்தினருக்கும் எடுத்துக் காட்டுகிறது" என்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web