கோவையில் 50 கிலோ சந்தனக் காப்புடன் முந்தி விநாயகர் - திண்டுக்கல்லில் 5 டன் பூக்களால் பிரம்மாண்ட அலங்காரம்!
விநாயகர் சதுர்த்திப் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள புகழ்பெற்ற புலியகுளம் முந்தி விநாயகருக்கு 50 கிலோ சந்தனம் மற்றும் மலர்களால் ராஜ அலங்காரம் செய்யப்பட்டுள்ளதுடன், திண்டுக்கல்லில் 32 அடி உயர விநாயகர் சிலைக்கு 5 டன் பூக்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோயிலில் உள்ள சிலை ஆசிய கண்டத்திலேயே 190 டன் எடை கொண்ட ஒற்றைக் கல்லால் ஆன மிகப்பெரிய சிலையாகும். இதன் உயரம் 19 அடியும், அகலம் 10 அடியும் கொண்டது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இம்மூலவருக்கு 50 கிலோ சந்தனம், இரண்டு டன் மலர்கள் மற்றும் மயில் தோகை போன்ற பிரத்யேக மாலைகள் அணிவிக்கப்பட்டு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், அதிகாலையிலேயே சிறப்புப் பூஜைகள் மற்றும் யாகங்கள் நடத்தப்பட்டு கொழுக்கட்டைகள் நைவேத்தியம் செய்யப்பட்டன.
அதே போன்று திண்டுக்கல் மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர்: திண்டுக்கல் கோபால சமுத்திரக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ நன்மை தரும் 108 விநாயகர் கோயிலில் உள்ள, ஆசிய கண்டத்திலேயே ஒரே கல்லாலான 32 அடி உயர மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் சிலைக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.

இந்தக் கோயிலில் உள்ள 108 விநாயகர் சிலைகளுடன் சேர்த்து, பிரதான 32 அடி உயர சிலையும் சுமார் 5 டன் வண்ணப் பூக்களால் கண்கவர் வகையில் அலங்கரிக்கப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்தும், புகைப்படம், மற்றும் வீடியோக்கள் பதிவு செய்தும் பயபக்தியுடன் தரிசித்து வருகின்றனர். அதே போன்று ரூபாய் நோட்டுக்களால் காஞ்சிபுரம் ஏலேல சிங்கர் விநாயகர் அலங்கரிப்பட்டிருந்தது பக்தர்களை வசீகரித்தது.
