சேலம் ராஜகணபதி கோவிலில் தேரோட்டம் - முதன்முறையாகத் திருத்தேரில் வலம் வந்த விநாயகர்!
சேலம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ராஜகணபதி கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பக்தி கோஷங்களுடன் மிக விமரிசையாக நடைபெற்றது.
சேலம் நகரின் மையத்தில் விளங்கும் 300 ஆண்டுகள் பழமையான ராஜகணபதி கோவிலில், இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிறப்பம்சமாக ராஜகணபதி தங்கக் கவசத்தில் காட்சியளித்ததுடன், உற்சவர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விநாயகர் சதுர்த்தி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் விநாயகர் தேரில் எழுந்தருளியதும் வடம் பிடிக்கப்பட்டது. தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த நிலையில், வரலாட்டிலேயே முதல் முறையாகத் திருத்தேரில் வலம் வந்த விநாயகப் பெருமானைத் திரளான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தரிசித்தனர்.
இக்கோவிலில் நீண்ட காலமாகக்கொடிமரம் இல்லாமல் இருந்த குறை இந்த ஆண்டு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 15 அடி உயரத்தில் புதிய கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில், இந்த விநாயகர் சதுர்த்தி திருநாளில் புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு உற்சவங்கள் சிறப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டு, ராஜகணபதிக்கு 21 வகையான மங்கலப் பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டதுடன், புதிய கொடி மரத்திற்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
