விசாரணைக்காகப் போலீசார் தேடிச் சென்றதால் லாரி டிரைவர் தற்கொலை.. .உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

 
லாரி

கன்னியாகுமரி அருகே நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்காகப் போலீசார் வீடு தேடிச் சென்றதால், மன உளைச்சலுக்கு ஆளான லாரி டிரைவர் ஒருவர் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தனது மரணத்திற்குக் காவல்துறை அதிகாரிகளே காரணம் என அவர் கடிதம் எழுதி வைத்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி அருகே உள்ள வட்டக்கோட்டை பால்குளம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 39). லாரி டிரைவராகப் பணியாற்றி வந்த இவர் மீது அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் சில வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளன. வழக்குகள் தொடர்பாகக் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில், சுதாகர் கடந்த ஒரு மாதமாகப் போலீசாருக்குப் பயந்து தலைமறைவாக வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. போலீசார் அவரைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு விசாரணைக்காகப் போலீசார் சுதாகரைத் தேடி அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

போலீசார் வீடு தேடிச் சென்ற தகவலை அறிந்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சுதாகர், கன்னியாகுமரி நாடான்குளம் பகுதியில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்துத் தகவல் அறிந்த உறவினர்கள் உடனடியாகக் கன்னியாகுமரி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கன்னியாகுமரி போலீசார், சுதாகரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாகச் சுதாகர் எழுதி வைத்துள்ளதாகக் கூறப்படும் கடிதத்தில், தனது மரணத்திற்கு அஞ்சுகிராமம் காவல் நிலைய ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்) மற்றும் உதவி ஆய்வாளர் (சப்-இன்ஸ்பெக்டர்) ஆகியோரே காரணம் எனக் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

இந்த குற்றச்சாட்டை முன்வைத்து, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்திச் சுதாகரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துச் சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாகக் கன்னியாகுமரி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.