“தாமரைச் சின்னமா?” - ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நிர்வாகிகள் 2 பேர் ராஜினாமா!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் ‘தாமரை’ சின்னத்தில் போட்டியிடும் ஜி.கே.வாசனின் முடிவை எதிர்த்து, தமாகா நிர்வாகிகள் பிஜூ சக்கோ மற்றும் புருஷோத்தமன் ஆகியோர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
கட்சியிலிருந்து விலகிய நிர்வாகிகள் ஜி.கே.வாசனின் முடிவைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். "பெரிய கட்சியான அதிமுக கூட்டணியில் இருந்தும், அக்கட்சியின் இரட்டை இலை சின்னத்திலோ அல்லது தமாகாவின் தனிச் சின்னத்திலோ போட்டியிடாமல், தாமரைச் சின்னத்தில் நிற்க வேண்டிய அவசியம் என்ன?" என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

"மாவட்டத் தலைவர்களான எங்களிடம் எவ்வித ஆலோசனையும் செய்யாமல், தன்னிச்சையாக இந்த முடிவை வாசன் எடுத்துள்ளார். அவருடன் சேர்ந்து நாங்களும் பலி கடா ஆக விரும்பவில்லை" என ஆவேசமாகத் தெரிவித்துள்ளனர். 2016ல் ஜெயலலிதா 10 தொகுதிகளை ஒதுக்கி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடச் சொன்னபோது மறுத்துவிட்டு, மக்கள் நலக் கூட்டணியில் இணைந்ததைச் சுட்டிக்காட்டிய அவர்கள், தற்போது பாஜக சின்னத்தை ஏற்றது அதிருப்தி அளிப்பதாகக் கூறியுள்ளனர்.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாகாவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர் மற்றும் கும்பகோணம் ஆகிய தொகுதிகளில் தமாகா போட்டியிடுகிறது. 'சைக்கிள்' சின்னம் தொடர்பான சட்டச் சிக்கல்கள் காரணமாகவே 'தாமரை' சின்னத்தைத் தேர்ந்தெடுத்ததாக ஜி.கே.வாசன் விளக்கம் அளித்திருந்தார். இருப்பினும், தமாகா நிர்வாகிகள் தொடர்ச்சியாக வெளியேறுவது அக்கட்சிக்குத் தேர்தல் நேரத்தில் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
