சமூக வலைதள நட்பில் மலர்ந்த காதல்... துணை நடிகை திருநங்கை கயல்விழியை கரம்பிடித்த ஐடி ஊழியர் பிரவீன்ராஜ்!

 
துணை நடிகை திருநங்கை கயல்விழி பிரவீன்ராஜ்!

சமூக வலைதளம் மூலம் தொடங்கிய நட்பு காதலாக மாறி, இருவீட்டாரின் பூரண சம்மதத்துடன் திருநங்கை கயல்விழி - பிரவீன்ராஜ் தம்பதியின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை கயல்விழி திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் துணை நடிகையாகப் பணியாற்றி வருகிறார். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன்ராஜ் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் வாயிலாக அறிமுகமான இவர்கள் இருவருக்கும் இடையே நட்பு உருவாகியுள்ளது. நாளடைவில் இந்த நட்பு இருவருக்குள்ளும் ஆழமான காதலாக மலர்ந்தது. சுமார் 5 ஆண்டுகள் தீவிரமாகக் காதலித்து வந்த இவர்கள், தங்கள் காதலைப் பெற்றோரிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.

கயல்

திருநங்கை - ஆண் இடையிலான இந்தக் காதலுக்கு இருவீட்டுப் பெற்றோரும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் பச்சைக்கொடி காட்டி, முறைப்படி திருமணம் செய்து வைக்கச் சம்மதித்தனர். இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது. புதுமணத் தம்பதியினருக்குச் சமூக வலைதளங்களிலும், திரைத்துறையைச் சேர்ந்தவர்களிடம் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.