கல்லூரி மாணவிக்கு 'லவ் டார்ச்சர்'.. ஆபாச செய்கை காட்டிய இளைஞரை அலேக்காகத் தூக்கிய 'சிங்கப்பெண் அதிரடிப்படை'!
தூத்துக்குடியில் கல்லூரி மாணவி ஒருவரைத் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி, ஆபாசச் செய்கைகளால் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்த சொக்கலிங்கம் என்ற வாலிபரை, தமிழக அரசின் புதிய 'சிங்கப்பெண் அதிரடிப்படை' போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். சமையல் வேலை செய்து வரும் இவருக்குத் திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து விவாகரத்து பெற்றுத் தனியாக வாழ்ந்து வருகிறார். இவர் அந்தப் பகுதியில் உள்ள கல்லூரிக்குச் செல்லும் மாணவி ஒருவரைத் தொடர்ந்து பின்தொடர்ந்து சென்று, தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி 'லவ் டார்ச்சர்' கொடுத்து வந்துள்ளார். மேலும், அந்த மாணவிக்குத் தொடர்ந்து ஆபாசச் செய்கைகளைக் காட்டி மன ரீதியாகப் பெரும் தொந்தரவும் கொடுத்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்துத் தனது தந்தையிடம் அழுதுகொண்டே விவரித்துள்ளார்.

தன் மகளுக்கு நேர்ந்த அநீதியைக் கண்டு கொதித்தெழுந்த தந்தை, தமிழக அரசின் பெண்களுக்கான பிரத்யேகப் பாதுகாப்புப் படையான 'சிங்கப்பெண் அதிரடிப்படை'யின் இலவச அழைப்பு எண்ணான 1091-ஐத் தொடர்பு கொண்டு சொக்கலிங்கம் குறித்துப் புகார் அளித்தார். புகார் வந்த அடுத்த சில நிமிடங்களிலேயே சிங்கப்பெண் அதிரடிப்படை களத்தில் இறங்கியது:
சிங்கப்பெண் அதிரடிப்படை உதவி ஆய்வாளர்ஆரோக்கிய ஜென்சி தலைமையிலான பெண் போலீசார், சொக்கலிங்கம் இருக்கும் செக்காரக்குடி கிராமத்திற்கு நேரடியாக விரைந்தனர். அங்குச் சிறுமிக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்த சொக்கலிங்கத்தை அலேக்காகத் தூக்கி, முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர் தூத்துக்குடி புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசார் இச்சம்பவம் குறித்துச் சிறுமியிடமும் அவரது குடும்பத்தாரிடமும் விரிவான விசாரணை நடத்தினர். மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதி உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சொக்கலிங்கம் மீது கடுமையான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட சொக்கலிங்கத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அனைத்து மகளிர் காவல் துறையினர், அவரை நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே சிங்கப்பெண் அதிரடிப்படை எடுத்த இந்த மின்னல் வேக நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
