திருமணத்திற்கு மறுத்த காதலன்... 9வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!
சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்ட காதலன் மௌனம் சாதித்ததால் மனமுடைந்த இளம்பெண் ஒருவர், அடுக்குமாடிக் குடியிருப்பின் 9-வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சோழிங்கநல்லூரைச் சேர்ந்தவர் வருண் பாலாஜி (31). இவரும் பர்வீன் (24) என்ற இளம்பெண்ணும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, தங்களது காதலைத் திருமணத்தில் முடிப்பது குறித்துப் பர்வீன் பலமுறை வருண் பாலாஜியிடம் வற்புறுத்திக் கேட்டுள்ளார். ஆனால், வருண் பாலாஜி அதற்கு எவ்விதப் பதிலும் அளிக்காமல் தொடர்ந்து மௌனம் சாதித்துள்ளார்.

காதலன் திருமணத்திற்குச் சம்மதிக்காமல் மௌனம் காத்ததுடன் தன்னை ஏமாற்றுவதாகக் கருதிக் கடும் மனவேதனை அடைந்த பர்வீன், தான் வசிக்கும் குடியிருப்பின் 9-வது மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த செம்மஞ்சேரி காவல் நிலைய போலீசார், உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த பர்வீனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்கொலைக்குக் காரணமான காதலன் வருண் பாலாஜியை அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
