ரயில் தண்டவாளத்தில் காதலர்களின் சிதைந்த சடலங்கள் - இன்ஸ்டா பதிவிற்குப் பின் விபரீதம்!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இளம் ஜோடி, ரயில் தண்டவாளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் உள்ள வித்யாசாகர் - மதன் கட்டா ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில், தண்டவாளத்தில் ஒரு ஆணும் பெண்ணும் சிதைந்த நிலையில் சடலமாகக் கிடப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடல்களைக் கைப்பற்றி நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் ராக்கி மண்டல் (18) மற்றும் ஷாசியா (17) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் முன்னதாகக் கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
உயிரிழப்பதற்கு முன்பாக, "தங்களை ஒன்றாகவே அடக்கம் செய்ய வேண்டும்" எனத் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்கள் பதிவிட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக, காதலர்கள் இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் எனக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், வேறு ஏதேனும் கோணத்தில் இச்சம்பவம் நடந்ததா என்பது குறித்தும் ஜம்தாரா காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
