அசத்தல்... பீச் ரிசார்ட்டில் திருமணம்... தமிழக அரசு அதிரடி திட்டம் அறிவிப்பு!
தமிழகத்தில் வருவாயை பெருக்குவதற்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தும் செயல்படுத்தியும் வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாமல்லபுரம் கடற்பகுதியில் குறிப்பிட்ட பரப்பை குறைந்த செலவில் குடும்பவிழாக்கள், கொண்டாட்டங்கள், திருமணங்கள் நடத்த புதிய திட்டத்தை மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்காக சென்னை அருகிலுள்ள மாமல்லபுரம் பகுதியில் உள்ள சுற்றுலா வளர்ச்சி துறை விடுதியில் கடற்கரை திருமணம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இத்தகவல் இளசுகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் இந்த திட்டத்தின் கீழ் திருமண நிகழ்ச்சிக்கான முன்பதிவு மற்றும் பராமரிப்பு கட்டணமாக ரூ.10,000 வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 22 மணி நேரம் தங்குவதற்கு ரூ.5,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உணவு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சைவ உணவுக்கு ஒருவருக்கு ரூ.700ஆகவும், அசைவ உணவுக்கு ஒருவருக்கு ரூ.1,100ஆகவும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் இந்த திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் என தமிழக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
