காற்றழுத்த தாழ்வுப்பாதை... இன்று தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலக் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகத்தின் பல்வேறு தென் மற்றும் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் 5 தென் மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அவசர வானிலை முன்னறிவிப்பின்படி, தென் மாவட்டங்களில் மழை வாய்ப்புப் பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி (நெல்லை) மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை நீடிக்கக்கூடும். இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாகக் மேகக் கூட்டங்கள் தென் தமிழகக் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகின்றன. இதன் காரணமாகவே தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருவதாகவும், பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் இடி மின்னல் நிகழ்வுகளின் போது எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
