வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி... இன்று தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 
வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி  கனமழை மழை

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு மழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கிழக்கு-மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி நிலவுகிறது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று கிழக்கு-மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை கல்லூரி விடுமுறை மாணவிகள் குடை

இதன் தாக்கத்தின் காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, கடலூர், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருச்சி ஆகிய 21 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். பிற மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

அதனைத் தொடர்ந்து, நாளையும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் மாநிலத்தின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழை விடுமுறை

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெயவதற்கான சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.