தமிழ்நாட்டில் L&T ரூ.18,600 கோடி முதலீடு - 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு!

 
L&T முதலீடு L&T முதலீடு

இந்தியாவின் முன்னணி உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான நிறுவனமான லார்சன் & டூப்ரோ , தமிழ்நாட்டில் ரூ.18,600 கோடி மதிப்பிலான மூன்று பிரம்மாண்ட புதிய திட்டங்களைச் செயல்படுத்த அதிகாரப்பூர்வமாக முன்வந்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 8,200 இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளன.

எல் அண்ட் டி நிறுவனம் மேற்கொள்ளவிருக்கும் இந்த ரூ.18,600 கோடி முதலீடானது, தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள 3 முக்கிய மாவட்டங்களின் தொழிற்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் பிரிக்கப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் டிஜிட்டல் தேவைகளைக் கருத்தில் கொண்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எல் அண்ட் டி நிறுவனத்தின் 'தகவல் தரவு மையம்' தற்போது கூடுதல் உள்கட்டமைப்புகளுடன் பிரம்மாண்டமாக விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையில், அதிநவீன மின்னணுப் பொருட்கள் உற்பத்தி ஆலை புதிய தொழில்நுட்பங்களுடன் அமைக்கப்படவுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள எல் அண்ட் டி நிறுவனத்தின் புகழ்பெற்ற கப்பல் கட்டும் தளம் சர்வதேசத் தரத்திற்கு மேலும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

இந்த மாபெரும் முதலீட்டுத் திட்டங்களை முறைப்படுத்துவது மற்றும் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பாக ஒரு முக்கிய உயர்மட்டச் சந்திப்பு இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யை, லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் தலைவரான எஸ்.என்.சுப்ரமண்யன் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, தமிழகத்தில் எல் அண்ட் டி நிறுவனம் மேற்கொள்ளவுள்ள இந்த 3 புதிய திட்டங்களுக்கான நில ஒதுக்கீடு மற்றும் அரசுத் தரப்பு அனுமதிகளை விரைந்து வழங்குவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக எல் அண்ட் டி தலைவர் இந்தச் சந்திப்பின் போது மகிழ்ச்சி தெரிவித்தார்.