ஈடன் கார்டன்ஸில் லக்னோவின் அசுர வேட்டை - கடைசி பந்தில் கொல்கத்தாவை வீழ்த்தி 'திரில்' வெற்றி!
19-வது ஐபிஎல் தொடரின் பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. கடைசி ஓவர் வரை வெற்றிக்காக இரு அணிகளும் மல்லுக்கட்டிய நிலையில், லக்னோவின் இளம் வீரர் முகுல் சௌத்ரி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.
டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணிக்குத் தொடக்க வீரர் ரகுவன்ஷி (45) மற்றும் கேப்டன் அஜின்க்யா ரஹானே (41) சிறப்பான அடித்தளம் அமைத்தனர். கடைசி நேரத்தில் ரோவ்மன் பவல் (39*) மற்றும் கேமரூன் கிரீன் (32*) அதிரடி காட்ட, கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.

182 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய லக்னோ அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட் போன்ற நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆயுஷ் பதோனி (54) ஒருபுறம் போராட, லக்னோ அணி 128 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் நின்றது.
வெற்றிக்குக் கடைசி 2 ஓவர்களில் 28 ரன்கள் தேவைப்பட்டபோது, அறிமுக வீரர் முகுல் சௌத்ரி விஸ்வரூபம் எடுத்தார். கேமரூன் கிரீன் வீசிய 19-வது ஓவரில் 14 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் வைபவ் அரோரா பந்துவீச்சில் 2 மெகா சிக்சர்களைப் பறக்கவிட்டார்.

கடைசி ஒரு பந்துக்கு 1 ரன் தேவைப்பட்ட நிலையில், லக்னோ அணி திரில் வெற்றியை எட்டியது. முகுல் சௌத்ரி வெறும் 27 பந்துகளில் 7 சிக்சர்களுடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.
இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மறுபுறம், ஆடிய 4 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள கொல்கத்தா மற்றும் சென்னை சிஎஸ்கேஅணிகள் இன்னும் வெற்றிக் கணக்கைத் தொடங்காமல் கடைசி இடங்களில் உள்ளன.
