சொகுசு கார் மோதி விபத்து... சத்தீஸ்கரில் அமைச்சர் கேதர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் - 6 பேர் படுகாயம்!
சத்தீஸ்கர் மாநில வனத்துறை அமைச்சர் கேதர் காஷ்யாப்பின் அணிவகுப்பு வாகனங்கள் மீது சொகுசு கார் மோதி ஏற்பட்ட விபத்தில், அமைச்சர் காயமின்றி தப்பிய நிலையில் 6 பேர் பலத்த காயமடைந்தனர்.
சத்தீஸ்கர் மாநில வனத்துறை அமைச்சரான கேதர் காஷ்யாப், தனது சொந்த ஊரான பர்சாகுடாவில் இருந்து கொண்டாகாவன் நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார். பாதுகாப்புக்காகக் காவல்துறையினரின் வாகனமும் பின்னால் சென்றுள்ளது. பஸ்தார் மாவட்டம், பான்புரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சென்றபோது, எதிரே அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று அமைச்சரின் வாகனம் மற்றும் பாதுகாப்பு வாகனத்தின் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் கடுமையாகச் சேதமடைந்தது. அதில் பயணித்த அமைச்சரின் தனி உதவியாளர், 4 காவலர்கள் மற்றும் வாகன ஓட்டுநர் ஆகிய 6 பேர் காயமடைந்தனர். விபத்தின் தீவிரத்திலும் வனத்துறை அமைச்சர் கேதர் காஷ்யாப் எந்தவிதக் காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்துப் பான்புரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
