சீறிப் பாய்ந்த சொகுசு கார்... மதுபோதையில் மோதியதில் 3 கல்லூரி மாணவர்கள் பலி!

 
கேரளா சொகுசு கார் விபத்து

கேரள மாநிலம் கொச்சியில் பிறந்தநாள் பரிசாகப் பெற்ற சொகுசு காரை மதுபோதையில் மணிக்கு 125 கி.மீ. வேகத்திற்கும் அதிகமான வேகத்தில் இயக்கி, ஸ்கூட்டி மீது மோதியதில் மூன்று கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய இளைஞரும் அவருடன் பயணித்தவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொச்சி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள நெடும்பாசேரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:45 மணியளவில் இக்கோர விபத்து நிகழ்ந்துள்ளது. 19 வயதான சுஹைல் சஞ்சீவ் ஓட்டி வந்த 'மினி கூப்பர்' சொகுசு கார், மூன்று பேர் பயணித்த ஸ்கூட்டி மீது பின்னால் இருந்து அதிவேகமாக மோதியது. மோதிய வேகத்தில் ஸ்கூட்டியை சுமார் 100 மீட்டர் தூரம் கார் இழுத்துச் சென்று நின்றது.

விபத்து

விபத்தில் சிக்கிய வயநாடு மடக்கிமலையைச் சேர்ந்த தேவிகா (21), பாலக்காட்டைச் சேர்ந்த கோபிகா (22) மற்றும் கர்நாடகா மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த இஜாஸ் (21) ஆகிய மூன்று பேரும் காக்கநாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இவர்களில் கோபிகாவும் தேவிகாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இஜாஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய பின் எந்தவித குற்றவுணர்வும் இன்றி, “இது ஏர்போர்ட் ரோடு.. வேகமாக ஓட்டுவதில் என்ன தவறு? சாலைகள் வாகனங்களை ஓட்டுவதற்காகத் தானே? இந்த விவகாரத்தை என் அப்பா பார்த்துக் கொள்வார்” என ஓட்டுநர் சுஹைல் சஞ்சீவ் மற்றும் அவருடன் காரில் வந்த நினவ் ஆகியோரும் திமிராகப் பேசியதாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் மற்றும் காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

கேரளாவில் மது அருந்துவதற்கான சட்டப்பூர்வ வயது 23 ஆன நிலையில், 19 வயதான சுஹைல் சஞ்சீவ் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது சட்டவிரோதமாகும். இதனைக் கண்டறிந்த காவல்துறையினர் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 105-ன் கீழ் (கொலைக்கு ஈடாகாத வழக்குப் பதிவு செய்து சுஹைல் சஞ்சீவ் மற்றும் உடன் பயணித்த நினவ் ஆகியோரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவர்களுக்கு மதுபானம் வழங்கிய பார்கள் குறித்தும் கலால் துறை விசாரணை நடத்தி வருகிறது.