சிக்னல் தடுப்பில் மோதிய சொகுசு கார்... பிரேக்கிற்குப் பதில் ஆக்சிலேட்டரை மிதித்ததால் 3 வாகனங்கள் சேதம்!

 
சிக்னல் கார் விபத்து

சென்னை அம்பத்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் ஒன்று, சிக்னல் தடுப்பு மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் 3 வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.

சென்னை அம்பத்தூர் பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (50) என்பவர், தனது சொகுசு காரில் கள்ளிக்குப்பம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். கார் புதூர் பகுதி போக்குவரத்து சிக்னல் அருகே வந்தபோது, காரை நிறுத்துவதற்காகப் பிரேக்கிற்குப் பதிலாக தவறுதலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதாகக் கூறப்படுகிறது.

விபத்து

இதனால் திடீரென வேகம் எடுத்த கார் பாண்டியனின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த 3 இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து வேகமாக மோதியது. மேலும் நிற்காமல் சென்று அங்கிருந்த புதூர் காவல் உதவி மையத்தின்  மீதும் மோதி நின்றது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனங்களில் பயணித்தவர்கள் காயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்பு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து அம்பத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.