சொகுசு ஆம்னி பேருந்து லாரி மீது மோதி விபத்து; 2 பேர் பலி; 27 பேர் படுகாயம்!

 
ஆம்னி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாரணாசியில் இருந்து டெல்லி நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து, நெடுஞ்சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாகப் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்தில் பயணித்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 27 பயணிகள் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாரணாசி நகரில் இருந்து டெல்லிக்கு 45 பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று நேற்று இரவு புறப்பட்டுச் சென்றது.  அந்தப் பேருந்து இன்று அதிகாலை கான்பூர் - இட்டாவா - ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி ஒன்றின் பின்புறத்தில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து எதிர்பாராத விதமாகப் பயங்கர சத்தத்துடன் மோதியது.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

இந்த விபத்தின் வீரியத்தால் ஆம்னி பேருந்தின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கிச் சிதைந்தது. அதிகாலை நேரத்தில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கண் அயர்ந்து தூங்கியதே இந்த விபத்துக்கு மிக முக்கியக் முதற்கட்டக் காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த சத்தம் கேட்டு அந்த நெடுஞ்சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இக்கோர விபத்தில் பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, அடையாளம் தெரியாத 2 பயணிகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பேருந்தில் பயணித்த 27 பயணிகள் கை, கால் முறிவு உள்ளிட்ட கடுமையான இரத்தக் காயங்களுடன் அலறியபடி மீட்கப்பட்டனர்.

விபத்து

விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர் போலீசார், காயமடைந்த 27 பயணிகளையும் உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அவசரச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார், உடற்கூறாய்விற்காக பிரேதப் பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்துக்குள்ளான வாகனங்களை ராட்சத கிரேன் மூலம் அப்புறப்படுத்தி, நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலை போலீசார் விரைந்து சீரமைத்தனர். இக்கோர விபத்து குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய பேருந்து ஓட்டுநர் மற்றும் விபத்தின் முழுப் பின்னணி குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.