சொர்க்கத்திலும் சொகுசுப் பயணம்.. இறுதிசடங்கில் ₹1.49 கோடி பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - வைரலாகும் வீடியோ!
உயிரிழந்தவர்களுக்குப் பிடித்தமான பொருட்களைச் சின்னங்களாகப் புதைப்பது வழக்கம். ஆனால், சீனாவில் ஒரு குடும்பத்தினர் நிஜமான சொகுசு காரையே புதைத்து, பின்னர் அதிகாரிகளின் தலையீட்டால் அதைத் தோண்டி எடுத்துள்ளனர்.
லியோனிங் மாகாணத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் சமீபத்தில் காலமானார். அவர் தனது வாழ்நாளில் விலையுயர்ந்த கார்களைச் சேகரிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதாகக் கருதி, அவரது பிள்ளைகள் சுமார் 1.1 மில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் ₹1.49 கோடி) மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ரக சொகுசு காரை அவருடன் சேர்த்து புதைக்க முடிவு செய்தனர்.
அந்த காரில் '8888' என்ற அதிர்ஷ்ட எண்ணைக் கொண்ட நம்பர் பிளேட்டும் இருந்தது. காரைச் சிவப்புக் துணியால் போர்த்தி, ஜே.சி.பி இயந்திரம் மூலம் பெரிய பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டது. இதற்காக உதவி செய்த கிராம மக்களுக்குத் தலா ₹6,000 (500 யுவான்) அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்த விபரீதச் செயலின் வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, உள்ளூர் சிவில் விவகாரத் துறை உடனடியாகத் தலையிட்டது.
இது ஒரு ‘நிலப்பிரபுத்துவ மூடநம்பிக்கை’ என்றும், இத்தகைய ஆடம்பரங்கள் சட்டவிரோதம் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர். காரில் உள்ள பேட்டரி, ஆயில் மற்றும் ரசாயனங்கள் மண்ணுக்கு அடியிலும், நிலத்தடி நீரிலும் கலந்து கடுமையான சுற்றுச்சூழல் மாசினை ஏற்படுத்தும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. அதிகாரிகளின் உத்தரவைத் தொடர்ந்து, புதைக்கப்பட்ட சொகுசு கார் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.

இது குறித்து அக்குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், “தந்தையின் மீதான பாசத்தால் உணர்ச்சிவசப்பட்டு இச்செயலைச் செய்து விட்டோம். இது பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணரவில்லை,” எனத் தெரிவித்துப் பகிரங்க மன்னிப்புக் கோரினர். மேலும் காரைத் தோண்டி எடுத்ததற்கான செலவு மற்றும் அந்த நிலத்தைச் சீரமைக்கும் செலவையும் அக்குடும்பமே ஏற்றுக் கொண்டது.
சீன வழக்கப்படி, இறந்தவர்கள் சொர்க்கத்தில் சொகுசாக இருக்க கார், வீடு போன்றவற்றைத் தாளால் செய்து எரிப்பது வழக்கம். ஆனால், நிஜ காரையே புதைத்த இந்தச் சம்பவம் உலகளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
