போர் பதற்றம்: லெபனானில் பிரான்ஸ் வீரர் பலி - ஹிஸ்புல்லா மீது மேக்ரான் குற்றச்சாட்டு!

 
மேக்ரான் மேக்ரான்

லெபனானில் ஐக்கிய நாடுகளின் அமைதிப் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்த பிரான்ஸ் நாட்டு வீரர் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பே காரணம் எனத் தெரிவித்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என லெபனான் அரசுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இம்மானுவேல் மேக்ரான்

கொல்லப்பட்ட வீரர், பிரான்சின் மொன்டாபனைச் சேர்ந்த 17-வது பாராசூட் பொறியாளர் படைப்பிரிவின் சார்ஜென்ட் தலைவர் புளோரியன் மாண்டோரியோப் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று காலை தெற்கு லெபனானில் அமைதிப் படையினர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் அவர் வீரமரணமடைந்தார். அவருடன் பணியாற்றிய மேலும் மூன்று வீரர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் பிரான்ஸ் ராணுவத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் இம்மானுவேல் மேக்ரான்

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அதிபர் மேக்ரான், "நமது தேசம் இந்த வீரருக்கு மரியாதையுடன் தலைவணங்குகிறது. தாக்குதலுக்கான அனைத்து ஆதாரங்களும் ஹிஸ்புல்லா அமைப்பையே கைகாட்டுகின்றன. லெபனான் அதிகாரிகள் இதில் தலையிட்டு குற்றவாளிகளை உடனே சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரான்ஸ் அதிபரின் இந்த நேரடி எச்சரிக்கை அந்தப் பகுதியில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.