இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்! 4 முனைப் போட்டி 5 ஆக மாறியது - களத்தில் யார் யார்?
தமிழகத்தில் நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி என ஏற்கெனவே 4 முனைப் போட்டி நிலவி வந்த நிலையில், தற்போது இடதுசாரி கட்சிகளும் களமிறங்க முடிவு செய்துள்ளதால் 5 முனைப் போட்டி உருவாகியுள்ளது.மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த இடைத்தேர்தலை எதிர்கொள்ள முக்கிய அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.
தவெக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக சார்பில் மதுராந்தகத்தில் கணிதா சம்பத்தும், தாராபுரத்தில் பானுமதியும் களமிறங்குகின்றனர்.
திமுக சார்பில் மதுராந்தகத்தில் வக்கீல் பரந்தாமனும், தாராபுரம் தனித்தொகுதியில் வக்கீல் சுகன்யாவும் போட்டியிடுகின்றனர்.
இதனிடையே நாம் தமிழர் கட்சியும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மதுராந்தகத்தில் ஜானகிராமனும், தாராபுரத்தில் கார்த்திகாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தேர்தல் களத்தில் முக்கிய திருப்பமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) ஆகிய இரு கட்சிகளும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளன.அதன்படி, மதுராந்தகம் தொகுதியில் சிபிஎம், தாராபுரம் தொகுதியில் சிபிஐ போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு கட்சிகளின் வேட்பாளர்கள் செப்டம்பர் 15-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதன் மூலம் இதுவரை 4 முனைகளில் இருந்த போட்டி, தற்போது 5 முனைப் போட்டியாக மாறியுள்ளது. இதனால் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் தேர்தல் களம் மேலும் பரபரப்படைந்துள்ளது.
இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 16-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதுவரை முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை; சுயேச்சை வேட்பாளர்கள் மட்டும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.செப்டம்பர் 13 மற்றும் விநாயகர் சதுர்த்தியான செப்டம்பர் 14 ஆகியவை விடுமுறை நாட்கள் என்பதால், வேட்புமனு தாக்கலுக்கு செப்டம்பர் 15 மற்றும் 16 ஆகிய நாட்கள் மட்டுமே உள்ளன. கடைசி நாளில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தகவல்களின்படி, செப்டம்பர் 25-ம் தேதி மதுராந்தகத்தில் இருந்து அவரது பிரசாரம் தொடங்க உள்ளதாகவும், செப்டம்பர் 27-ம் தேதி தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2 மற்றும் 3-ம் தேதிகளிலும் இரு தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்ள திட்டமுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனால், இடைத்தேர்தல் நெருங்க நெருங்க திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் மற்றும் இடதுசாரிகள் இடையே பிரசாரம் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் எந்தக் கட்சி முன்னிலை பெறும் என்பது வரும் நாட்களில் நடைபெற உள்ள பிரசாரம் மற்றும் அரசியல் நகர்வுகளுக்குப் பிறகே தெரியவரும். 5 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளதால் இந்த இரு தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் கூடுதல் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


