தண்டவாளத்தில் சிக்கிய கார் மீது மோதிய ரயில்... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!

 
கார்

 

மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாமில், ரெயில்வே தண்டவாளத்தில் சிக்கிய கார் மீது விரைவு ரெயில் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெயில் மோதுவதற்கு சில நொடிகளுக்கு முன்பு காரில் இருந்த ஓட்டுநர் வெளியே குதித்ததால் உயிர் தப்பினார். இந்தச் சம்பவத்தில் ரெயில்வே கேட் காப்பாளர் மது போதையில் இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தண்டவாளத்தில் சிக்கிய கார் மீது மோதிய ரெயில்

ரத்லாம் பகுதியில் நேற்று இரவு ரெயில்வே கேட் மூடப்பட்டுக் கொண்டிருந்தபோது, தண்டவாளத்தில் சிக்கியிருந்த கார் மீது ஹிசார்–வல்சாட் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. மோதிய வேகத்தில் கார் தண்டவாளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது. அப்போது ஓட்டுநர் காரிலிருந்து வெளியே குதித்துத் தப்பினார். இந்தச் சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர்.

கேட் காப்பாளர் மீது குற்றச்சாட்டு; விசாரணைக்கு உத்தரவு

ரெயில்வே கேட் காப்பாளர் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கார் உரிமையாளர் உபாத்யாய் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கேட் காப்பாளர் மது அருந்தியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையே, கேட் காப்பாளருடன் நடந்த உரையாடல் வீடியோவில் அவர் மது அருந்தியதாகக் கூறும் காட்சி பதிவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படாத நிலையில், கேட் காப்பாளரின் ரத்த மாதிரியைப் பரிசோதிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். ரெயில்வே கேட் மூடப்பட்டுக் கொண்டிருந்தபோது கார் உள்ளே நுழைந்ததாகவும், ரெயிலுக்கான சிக்னல் ஏற்கெனவே பச்சை நிறமாக மாறியிருந்ததால் அதை நிறுத்த முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்தில் ரெயிலில் பயணித்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. சேதமடைந்த காரை அகற்றிய பின்னர் ரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. குற்றச்சாட்டுகள் உறுதியானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.