மதுரை அருகே கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு! ரத்த வெள்ளத்தில் ஓடி தஞ்சம்...!

 
மதுரை

 

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்லூரி மாணவரை மர்ம நபர்கள் அரிவாளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த மாணவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அலங்காநல்லூர் அருகே கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்ற மாணவர், தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அலங்காநல்லூர் நான்கு வழிச்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் அவரது வாகனத்தை வழிமறித்ததாக தெரிகிறது.

ஆம்புலன்ஸ்

அப்போது அந்த கும்பல் சஞ்சய் குமாரை அரிவாளால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவரது தலை மற்றும் உடலில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. தாக்குதலில் இருந்து தப்பிய மாணவர், ரத்தம் வழிந்த நிலையில் அங்கிருந்து ஓடி அருகில் உள்ள கிராம மக்களிடம் தஞ்சம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இதையடுத்து அப்பகுதி மக்கள் படுகாயமடைந்த மாணவருக்கு உதவி செய்து, மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அலங்காநல்லூர் போலீசார், மாணவரிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

மேலும், தாக்குதல் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். அந்த காட்சிகளின் அடிப்படையில் மாணவரை தாக்கிய மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. முன்விரோதம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவருடன் சென்ற நண்பர் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கல்லூரி மாணவர் மீது பட்டப்பகலில் நடந்த இந்த தாக்குதல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.