மர்ம நபர்கள் திடீர் தாக்குதல்! கல்லூரி மாணவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. மதுரையில் பரபரப்பு!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்லூரி மாணவரை மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த மாணவர் ரத்தம் சொட்டிய நிலையில் அருகில் உள்ள கிராமத்துக்குள் ஓடி, பொதுமக்களிடம் தஞ்சம் அடைந்தார்.அலங்காநல்லூர் அருகே உள்ள கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் குமார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இன்று காலை தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அலங்காநல்லூர் நான்கு வழிச்சாலை பகுதியில் சென்றபோது, ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் அவரது வாகனத்தை வழிமறித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து சஞ்சய் குமாரை அரிவாளால் தாக்கியுள்ளனர்.இந்த தாக்குதலில் மாணவரின் தலை மற்றும் உடலில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. தாக்குதலில் இருந்து தப்பிய சஞ்சய் குமார், ரத்தம் சொட்டிய நிலையில் அங்கிருந்து ஓடி அருகில் உள்ள கிராமத்துக்குள் சென்று பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளார்.
இதையடுத்து பொதுமக்கள் காயமடைந்த மாணவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த அலங்காநல்லூர் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.மாணவரை தாக்கியவர்கள் யார், எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது உடனடியாக தெரியவில்லை. தாக்குதல் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும், மாணவருடன் சென்ற நண்பர் மற்றும் சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கல்லூரிக்குச் சென்ற மாணவர் மீது பட்டப்பகலில் நடந்த இந்த தாக்குதல் அலங்காநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கான காரணம் மற்றும் இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
