மதுரையில் எருமை திருட்டு.. 3 பேருந்துகளில் இரவோடு இரவாக பயணம் செய்து திருடர்களை போலீசில் சிக்க வைத்த 70 வயது பாட்டி!

 
எருமை

 

மதுரை மாவட்டம் அவணியாபுரம் அருகே எருமை மாடுகளை திருடிச் சென்றவர்களை 70 வயது மூதாட்டி துணிச்சலாக பின்தொடர்ந்து சென்று போலீசாரிடம் சிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பொதும்பு பகுதியைச் சேர்ந்த சீதையம்மாள் (70), தனது மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார்.

வயல்வெளியில் கட்டப்பட்டிருந்த அவரது எருமை மாடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.கடந்த 8-ந்தேதி ஒரு எருமை மாடு திருடப்பட்ட நிலையில், மீண்டும் நேற்று நள்ளிரவு சுமார் 2 மணியளவில் வெளியே வந்து பார்த்தபோது மேலும் 3 எருமைகள் காணாமல் போனதை சீதையம்மாள் கவனித்தார்.

எருமை

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், எப்படியாவது தனது எருமைகளை கண்டுபிடித்து மீட்டு வீட்டுக்கு கொண்டு வர வேண்டும் என முடிவு செய்தார். மகன்களுடன் சேர்ந்து எருமைகளை தேடும் பணியில் இறங்கினார்.மணப்பாறை சந்தையில் திருடப்பட்ட எருமைகள் இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரவோடு இரவாக 3 பேருந்துகளில் பயணம் செய்து மணப்பாறை சென்றார்.

அங்கு சந்தையில் தனது எருமைகளை பார்த்த சீதையம்மாள், அவை தன்னுடையது என்பதை அடையாளம் கண்டு உறுதி செய்தார். பின்னர் பொதுமக்களின் உதவியுடன் எருமைகளை மீட்டார்.இதையடுத்து எருமைகளை திருடியதாக சந்தேகிக்கப்படும் நபர்களையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.தனது கால்நடைகளை மீட்பதற்காக 70 வயதிலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டு திருடர்களை போலீசாரிடம் சிக்க வைத்த மூதாட்டியின் செயல் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.