மதுரை மத்திய சிறையில் காவலர் மீது கைதி திடீர் தாக்குதல்; பாதுகாப்பு பலப்படுத்தல்!
மதுரை மத்திய சிறையில் விசாரணைக்காக அடைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் தாக்கியதில் சிறைக் காவலர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் கடந்த அக்டோபர் 26-ம் தேதி இரவு 17 கைதிகள் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். பின்னர் தப்பியோடிய அனைவரையும் போலீசார் பிடித்து மீண்டும் வெவ்வேறு சிறைகளில் அடைத்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள சிறைகளில் பாதுகாப்பை அதிகரிக்க சிறைத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதன்படி மதுரை மத்திய சிறையிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிறையின் நுழைவுவாயிலிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிப்பில் உள்ளனர்.
இந்நிலையில், திருட்டு வழக்கில் தொடர்புடைய இளைஞர் ஒருவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த சிறைக் காவலர் ஒருவர் விசாரித்தபோது, ஆத்திரமடைந்த கைதி காவலரின் முகத்தில் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த காவலருக்குச் சிறை மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. அவருக்கு தற்போது ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
