‘ஹவுஸ் வொய்ஃப்’ இருக்கும்போது ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ இருக்கக்கூடாதா? ... உயர்நீதிமன்றம் பரபரப்பு!

 
விவாகரத்து

 

திருமண வாழ்க்கையில் பெண்களின் தொழில் வளர்ச்சிக்கு கணவர்கள் ஆதரவாக இருக்க வேண்டும் என்றும், தேவையான சூழலில் ஆண்களும் வீட்டுப் பொறுப்புகளை ஏற்று ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ ஆக இருக்கலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.திருவண்ணாமலையைச் சேர்ந்த தம்பதியினர் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை கிளை நீதிமன்றம், இன்றைய சமூக சூழலில் திருமண உறவுகள் எதிர்கொள்ளும் மாற்றங்கள் குறித்து பல்வேறு கருத்துகளை பதிவு செய்துள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை

பெண்கள் கல்வி கற்று வேலைக்குச் சென்று தொழில்முறையில் முன்னேறி வரும் நிலையில், திருமணம் மற்றும் குடும்பப் பொறுப்புகள் அவர்களின் தொழில் வளர்ச்சிக்கு தடையாக மாறக்கூடாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. திருமணம் தங்களது வேலைவாய்ப்பு அல்லது தொழில்முறை வளர்ச்சியை பாதிக்கும் என கருதி சில பெண்கள் திருமணத்தைத் தவிர்க்கும் நிலை குறித்து நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த சூழலில் குடும்பப் பொறுப்புகள் பெண்களுக்கு மட்டுமே உரியவை என்ற பாரம்பரிய அணுகுமுறை மாற வேண்டும் என்றும், கணவர்களும் வீட்டு வேலைகள் மற்றும் குடும்பப் பொறுப்புகளை பகிர்ந்து கொள்ள முன்வர வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சமூகத்தில் ‘ஹவுஸ் வொய்ஃப்’ என்ற நிலை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதைப் போலவே, குடும்பத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப ஆண்களும் வீட்டைப் பார்த்துக்கொள்ளும் ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ என்ற நிலையை ஏற்பதில் தயக்கம் காட்டக்கூடாது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.கணவன் மற்றும் மனைவி இருவரும் ஒருவருடைய பணிச்சூழல், தொழில்முறை பொறுப்புகள் மற்றும் தனிப்பட்ட விருப்பங்களை மற்றொருவர் மதித்து நடப்பது அவசியம் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

திருமண வாழ்க்கை என்பது ஒருவரது தொழில் அல்லது தனிப்பட்ட முன்னேற்றத்திற்கு தடையாக அமையாமல், கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கும் உறவாக இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், சட்ட நடைமுறைகளின்படி உரிய உத்தரவுகளைப் பிறப்பித்து வழக்கை முடித்து வைத்துள்ளது. நீதிமன்றத்தின் ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ குறித்த கருத்து தற்போது கவனம் பெற்றுள்ளது.