நாகர்கோவில் காசியின் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பு!
பெண்களை ஆபாசப் படமெடுத்து மிரட்டிப் பணம் பறித்த வழக்கில், நாகர்கோவில் காசிக்குக் கீழ் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்துள்ளது.
நாகர்கோவிலைச் சேர்ந்த காசி, பெண்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி, அவர்களை ஆபாசப் படமெடுத்து மிரட்டிய வழக்கில் நாகர்கோவில் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து காசி தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, காசியின் மனுவைத் தள்ளுபடி செய்து, கீழ் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை அப்படியே உறுதி செய்து உத்தரவிட்டது.
இந்த வழக்கின் தீர்ப்பின் போது, இன்றைய இளம்பெண்களுக்கு நீதிபதிகள் முக்கிய அறிவுரை ஒன்றையும் வழங்கினர். "இளம்பெண்கள் தங்களது தனிப்பட்ட மற்றும் அந்தரங்கப் புகைப்படங்களைத் தேவையில்லாமல் சமூக ஊடகங்களில் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும்." இந்தத் தீர்ப்பு, பெண்களைத் தவறான வழியில் ஏமாற்றி மிரட்டும் சமூக விரோதிகளுக்கு ஒரு பாடமாக அமையும் எனப் பரவலாகப் பேசப்படுகிறது.
