குலுங்கப் போகுது மதுரை... இன்று மீனாட்சி அம்மனை தரிசிக்கிறார் முதல்வர் விஜய் - புதிய திட்டங்கள் தொடங்கி வைப்பு!

 
மீனாட்சி அம்மன் விஜய்

கடந்த மாதம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று மண்டல பூஜைகள் நடந்து வரும் நிலையில், முதல்வரான பின்னர், விஜய் முதன்முறையாக இன்று மதுரைக்கு செல்கிறார். மதுரையில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன் கோவிலிலும் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.  

மீனாட்சி

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்காகச் செயல்படுத்தப்படவுள்ள ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ தொடக்க விழா, உசிலம்பட்டியில் நடைபெறுவதாக இருந்த நிலையில், தற்போது மதுரை ராஜாஜி அரசு  மருத்துவமனையில் இன்று நடைபெறுகிறது.

இன்று பகல் 12.30 மணிக்கு முதலமைச்சர் விஜய் இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து, பகல் 1 மணிக்கு முழுமையாகப் புனரமைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி அருங்காட்சியகத்தை அவர் திறந்து வைக்கவுள்ளார். 

நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இன்று மாலை 4.30 மணிக்கு உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில்-க்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். சமீபத்தில் இங்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளதால், முதல்வரின் வருகையை முன்னிட்டுப் பலத்த ஆன்மீக மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

மீனாட்சி

முதல்வரின் வருகையையொட்டி மருத்துவமனை வளாகக் கட்டடங்கள் வர்ணம் பூசப்பட்டுச் சீரமைக்கப்பட்டுள்ளதோடு, சாலைகளும் புதிய தார்ச் சாலைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. மேலும், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் திரள்வார்கள் என்பதால், விமான நிலையத்தில் இருந்து செல்லும் வழித்தடங்கள் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.