மதுரை நகைக்கடை கொள்ளை.. தருமபுரியில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளி நிஷாந்த் கைது!

 
தனிஷ்க் நகைக்கடை கொள்ளை

மதுரை பழங்காநத்தம்-காளவாசல் பைபாஸ் சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியும் யூடியூபருமான நிஷாந்த் தருமபுரியில் வைத்துத் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 12-ஆம் தேதி அதிகாலை நேரத்தில், அந்த நகைக்கடைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் கடையில் இருந்த ரூ.21 கோடி மதிப்பிலான 15 கிலோ தங்க மற்றும் வைர நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றார். உடல் முழுவதும் கருப்புத் துணியைச் சுற்றிக்கொண்டு, முகமூடி மற்றும் கையுறையுடன் தனி ஒருவனாக நைசாக உள்ளே நுழைந்து கைவரிசை காட்டிய இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை

தீவிர விசாரணையில், கொள்ளை அடித்தது பழங்காநத்தம் அருட்பெரும் ஜோதி தெருவைச் சேர்ந்த சுரேஷின் மகனும், யூடியூபருமான நிஷாந்த் (25) என்பது தெரியவந்தது. மேலும், இந்தச் சம்பவத்தில் நிஷாந்தின் காதலியும் இன்ஸ்டா பிரபலமுமான மீனாட்சி (23) மற்றும் நிஷாந்தின் தந்தை சுரேஷ் (50) ஆகியோருக்குத் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மாடக்குளம் கண்மாய் கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கிலோ நகைகளும் கைப்பற்றப்பட்டன.

கடந்த ஐந்து நாட்களாகத் தலைமறைவாக இருந்து வந்த நிஷாந்தைப் பிடிக்கக் காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்துத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தருமபுரி மாவட்டம் சேத்தம்பட்டி பகுதியில் அவர் பதுங்கியிருப்பதை அறிந்த தனிப்படை போலீசார், அங்கு விரைந்து சென்று நிஷாந்தை அதிரடியாகக் கைது செய்தனர்.

தனிஷ்க்

கைது செய்யப்பட்ட நிஷாந்தை உடனடியாக மதுரைக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தக் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். அவரிடமிருந்து எஞ்சியுள்ள தங்க மற்றும் வைர நகைகள் விரைவில் முழுமையாக மீட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.