“மதுரைகாரைங்கடா...” அரசுப் பேருந்தின் எல்.இ.டி திரையை ஹேக் செய்த நபர்கள்!

 
மதுரை

மதுரையில் இயங்கி வரும் அரசுப் பேருந்து ஒன்றின் எல்.இ.டி திரையை மர்ம நபர்கள் ஹேக் செய்து சர்ச்சைக்குரிய வாசகத்தை ஓடவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்து செல்லும் ஊர்களின் பெயர்களைப் பயணிகளுக்குக் காட்டுவதற்காகப் பேருந்தின் முகப்பில் பொருத்தப்பட்டிருந்த எல்.இ.டி திரையில், “மதுரை பயலுகடா கொடூரமா” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. பேருந்தின் டிஜிட்டல் திரையை மர்ம நபர்கள் புளூடூத் அல்லது வைஃபை தொழில்நுட்பம் மூலம் ஹேக் செய்து இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனக் சந்தேகிக்கப்படுகிறது. சாலையில் சென்ற பொதுமக்கள் இதைப் படம் பிடித்துச் சமூக வலைதளங்களில் பதிவிடவே, இந்த வீடியோ இணையத்தில் அதிவேகமாகப் பரவி வருகிறது.

இச்சம்பவம் குறித்துத் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்தின் எல்.இ.டி திரையை ஹேக் செய்த நபர் யார், எதற்காக இந்த அத்துமீறலில் ஈடுபட்டார் என்பது குறித்துத் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.