மதுரையில் 2 நாள் உள்ளூர் விடுமுறை! பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு!
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் செப்டம்பர் 16 மற்றும் 17 ஆகிய 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த மகா கும்பாபிஷேக விழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நகரின் போக்குவரத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் இந்த விடுமுறையை அறிவித்துள்ளது.
இந்த விடுமுறை அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக செப்டம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த பள்ளி மற்றும் கல்லூரிகளின் காலாண்டு, பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் செப்டம்பர் 18 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் அக்டோபர் மாதத்தில் வரும் இரண்டு சனிக்கிழமைகள் வேலை நாட்களாக செயல்படும் என்றும், செப்டம்பர் 24 பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் செப்டம்பர் 17-ம் தேதி காலை 7.40 மணி முதல் 8.10 மணி வரையிலான சுபமுகூர்த்தத்தில் நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு மதுரை முழுவதும் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
