சாலமன் பாப்பையா வசித்த தெருவிற்கு அவரது பெயர் சூட்டப்படும் - மதுரை மேயர் அறிவிப்பு!
தமிழறிஞரும் புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையாவின் மறைவை ஒட்டி, அவர் வசித்து வந்த தெருவிற்கு அவரது பெயர் சூட்டப்படும் என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.
வயது முதிர்வு காரணமாகக் காலமான சாலமன் பாப்பையாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. மதுரை வெப் மெமோரியல் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில், தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல்குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தத்தநேரி மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

மறைந்த சாலமன் பாப்பையாவின் இல்லத்திற்கு நேரில் சென்ற மதுரை மாநகராட்சி மேயர் (பொறுப்பு) நாகராஜன், அவரது குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மேயர் நாகராஜன், சாலமன் பாப்பையா வாழ்ந்து வந்த தெருவிற்கு அவரது பெயரைச் சூட்டுவதற்கான தீர்மானம் மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
