வீட்டின் அருகே விளையாடி மாயமான சிறுவன் சடலமாக மீட்பு!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு பகுதியில், காணாமல் போன 7 வயது சிறுவன் பாழடைந்த ஓட்டு வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பெரியகருப்பன் என்பவரின் மகன் முத்துவேலன், தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். விடுமுறை நாளில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மாயமானதைத் தொடர்ந்து, பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர், வீட்டின் அருகே உள்ள பாழடைந்த வீட்டில் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உடலில் காயங்கள் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, சிறுவனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், போலீசார் உரிய நேரத்தில் தேடுதல் நடத்தவில்லை என்றும் உறவினர்கள் குற்றம்சாட்டி, மதுரை அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே மரணத்திற்கான காரணத்தைத் தெரிவிக்க முடியும் என போலீசார் கூறியுள்ளனர்.
