மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நில மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது!

 
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நில மோசடி

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மற்றும் அழகர்கோவிலுக்குச் சொந்தமான ரூ.60 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பட்டா மாற்றம் செய்து பத்திரப்பதிவு செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரையில் கோவில் சேவைக்காக வழங்கப்பட்ட நிலத்தை, அதிகாரிகளுடன் சேர்ந்து போலி ஆவணங்கள் தயாரித்துச் சட்டவிரோதமாகப் பட்டா மாற்றம் செய்ததாக மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், 2016-ஆம் ஆண்டு மதுரை வடக்குத் தாசில்தாராக இருந்த அன்பழகன் என்பவர், நிலத்திற்கான கோவில் பெயரை நீக்கித் தனிநபர்கள் பெயருக்குப் பட்டா மாற்றம் செய்தது கண்டறியப்பட்டது. ராமநாதபுரம் துணை ஆட்சியராகப் பணியாற்றி வந்த அவர் கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் போலி ஆவணங்கள் மூலம் பட்டா பெற்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரைப் போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், திண்டுக்கல் சிறுமலையைச் சேர்ந்த காளிக்குமார் உள்ளிட்ட 3 பேர் கூட்டுச்சதியில் ஈடுபட்டு, வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் அந்த நிலத்தை மோசடியாக அடமானப் பத்திரம் பதிவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து காளிக்குமாரை மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.