மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு... நிஷாந்துக்கு 1ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

 
நிஷாந்த்

 

மதுரையில் ரூ.21 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகளை கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளியான யூடியூபர் நிஷாந்தை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் கடந்த 12-ம் தேதி அதிகாலை புகுந்த மர்ம நபர், சுமார் 15 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றார். இதன் மதிப்பு ரூ.21 கோடி என கூறப்பட்டது.

சிசிடிவி காட்சிகள் மற்றும் விசாரணையின் அடிப்படையில், மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த நிஷாந்த் (25) இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த வழக்கில் நிஷாந்தின் தந்தை சுரேஷ், காதலி மீனாட்சி ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சுமார் 6 கிலோ நகைகள் மீட்கப்பட்டன.

இதற்கிடையே தலைமறைவாக இருந்த நிஷாந்த், தருமபுரி மாவட்டம் சேத்தம்பட்டி அருகே தனியார் ஆம்னி பஸ்சில் பயணம் செய்தபோது போலீசாரிடம் சிக்கினார். பஸ் டிரைவர் அளித்த தகவலின் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து நிஷாந்திடம் நடத்திய விசாரணையில், மதுரை விலாச்சேரி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 6.4 கிலோ நகைகளை போலீசார் மீட்டனர். கொள்ளை சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.