மதுரை நகைக்கடை கொள்ளை... நிஷாந்த் பயன்படுத்திய 3 பைக்குகள்! போலீஸ் விசாரணையில் வெளியான தகவல்
மதுரை தனிஷ்க் நகைக்கடையில் சுமார் ரூ.15 கோடி மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில், நிஷாந்த் 3 இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தியது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் கடந்த நவம்பர் 12-ந்தேதி அதிகாலை சுமார் 11.384 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ரூ.15 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த யூடியூபர் நிஷாந்த் முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார். அவருடைய தந்தை சுரேஷ் மற்றும் தோழி மீனாட்சி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.தலைமறைவாக இருந்த நிஷாந்தை தர்மபுரி மாவட்டத்தில் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் முழுவதும் மீட்கப்பட்டன.
இந்த நிலையில், நகைக்கடையில் கொள்ளையடிக்க நிஷாந்த் 3 இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.கடந்த நவம்பர் 5-ந்தேதி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டபோது, தனது தோழி மீனாட்சியின் தாயாருக்குச் சொந்தமான பைக்கை நிஷாந்த் பயன்படுத்தியுள்ளார்.
அதேபோல், நவம்பர் 12-ந்தேதி கொள்ளையடிப்பதற்காக சர்வேயர் காலனியில் உள்ள ஒரு கடையில் இருந்து வாடகைக்கு பைக் எடுத்துச் சென்றுள்ளார். அந்த பைக்கிலேயே கொள்ளையடித்த நகைகளையும் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.இதைத்தொடர்ந்து, தனது சொந்த இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்திய நிஷாந்த், அந்த வாகனத்தை சேலத்தில் நிறுத்தி வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, நிஷாந்தை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி, நிஷாந்தை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.அப்போது, தனது தந்தை சுரேஷ் மற்றும் தோழி மீனாட்சிக்கு கொள்ளையில் தொடர்பு இல்லை என்றும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அனைத்தையும் ஒப்படைத்து விட்டதாகவும் நிஷாந்த் தெரிவித்ததாக கூறப்படுகிறது.மேலும், நிஷாந்த் தப்பிச் செல்ல உதவியவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
