அக்டோபர் 5, 6 பள்ளிகளுக்கு விடுமுறை! மதுராந்தகம், தாராபுரம் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, அந்தத் தொகுதிகளுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் முன்னேற்பாடுகள் மற்றும் வாக்குப்பதிவு பணிகளை மேற்கொள்ளும் வகையில் பள்ளி வளாகங்கள் வாக்குச்சாவடி மையங்களாக பயன்படுத்தப்பட உள்ளன.
இதையடுத்து, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அக்டோபர் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தாராபுரம் தொகுதியில் மட்டும் 233 பள்ளிகள் வாக்குச்சாவடி மையங்களாக மாற்றப்பட உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அக்டோபர் 5-ம் தேதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, பள்ளி வகுப்பறைகள் தேர்தல் அலுவலர்களின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளன.
தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை, வாக்குப்பதிவு நாளான அக்டோபர் 6-ம் தேதி மட்டும் விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், காலாண்டு விடுமுறை முடிந்து தமிழகத்தின் பிற பகுதிகளில் பள்ளிகள் அக்டோபர் 5-ம் தேதி மீண்டும் திறக்கப்படும் நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு உட்பட்ட பள்ளிகளில் மட்டும் தேர்தல் காரணமாக கூடுதல் விடுமுறை அமல்படுத்தப்படுகிறது.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ம் தேதி நடைபெற உள்ளது.எனவே, இந்த இரு தொகுதிகளுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர், தங்களது பள்ளி நிர்வாகம் அல்லது மாவட்ட கல்வித்துறை அறிவிப்புகளையும் கவனித்து செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
