சுற்றுலாப் படகு கவிழ்ந்து கோர விபத்து... தமிழக சிறுவன் உட்பட பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

 
mp mp

மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் பாயும் நர்மதா ஆற்றின் குறுக்கே பார்கி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த மாபெரும் அணையில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தொடர்ந்து படகு சவாரி இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதியான வியாழக்கிழமை அன்று மொத்தம் 44 பேர் படகு சுற்றுலா சென்றுள்ளனர். அந்தப் பயணத்தின்போது சுற்றுலாப் பயணிகள் யாருக்கும் உயிர் காக்கும் கவச உடை தரப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் சிக்கியவர்களில் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த காமராஜ் (38), அவரது மனைவி கார்குழலி (38) மற்றும் மகன்கள் தமிழ்வேந்தன் (5), புவிந்திரன் (10) ஆகியோரும் அடங்குவர். மேலும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த உறவினர்களான சவுபாக்கியா (42), அவரது மகள் இனியா (12) மற்றும் மகன் மயூரன் (8) என மொத்தம் 7 தமிழர்கள் அங்குப் பயணித்துள்ளனர். இவ்வாறாக ஆற்றின் நடுவே படகு சென்று கொண்டிருந்தபோது திடீரென வீசிய பலத்த சூறாவளிக் காற்றினால் படகு முற்றிலுமாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த எதிர்பாராத கோர விபத்தில் நீரில் மூழ்கி 9 பயணிகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த புவிந்திரன், மயூரன் உள்பட 28 பயணிகள் ஏற்கனவே மிகவும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும் மாயமானவர்களைத் தேடும் பணிக்காக ஆக்ராவில் இருந்து விமானம் மூலம் ராணுவத்தைச் சேர்ந்த 20 நீச்சல் வீரர்கள் விரைந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் 200 க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் அதிகாலை 5 மணி முதல் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுத் தமிழ்வேந்தன் (5), விராஜ் சோனி (6) ஆகிய குழந்தைகளின் உடல்களை நேற்றிரவு மீட்டனர். தொடர்ந்து காமராஜ் மற்றும் மயூரன் ஆகியோரது சடலங்களைத் தேடி வரும் நிலையில் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.