மகாளய அமாவாசை: முன்னோர்களின் ஆசியைப் பெற செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும்!

 
கும்பமேளா காசி புனித நீராடி பெண்கள் தரிசனம் குளம் கடல் அமாவாசை சூரிய வணக்கம் நமஸ்காரம் கங்கை

புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை திதி, நமது முன்னோர்களை மனதார நினைத்து வழிபடுவதற்கான மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வரும் முன்னோர்கள், நமது வழிபாட்டை ஏற்றுக்கொண்டு ஆசி வழங்குவதாக ஐதீகம். இந்தச் சிறப்புமிக்க நாளில் நாம் கடைபிடிக்க வேண்டிய முறைகளையும், தவிர்க்க வேண்டிய விஷயங்களையும் தெரிஞ்சுக்கோங்க.

செய்யக் கூடாதவை:

கோலம் போடுதல்: அமாவாசை நாளில் வழக்கமான நாட்களில் போடுவது போல வீட்டு வாசலில் கோலம் போடக் கூடாது. அன்றைய தினம் மது, புகைபிடித்தல் போன்ற போதைப்பழங்கள் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டும். மேலும், வீட்டில் அசைவ சமையல் செய்யவோ சாப்பிடவோ கூடாது; முந்தைய நாள் மீதமான உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

நாம் சமைத்து உண்ணும் உணவில் பூண்டு மற்றும் வெங்காயத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மகாளய அமாவாசை நாளில் நகம் வெட்டுதல் மற்றும் முடி வெட்டுதல் போன்ற செயல்களைச் செய்யக் கூடாது. யாரிடமும் கோபப்படக் கூடாது, யாரையும் அடிக்கக் கூடாது மற்றும் கடுமையான அல்லது தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது.

அமாவாசை தர்ப்பணம் திதி

முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்யும் போது, மற்றவர்களிடம் எள்ளை கடனாக வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. மேலும், சுமங்கலிப் பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் பெற்றோருக்காக எள்ளும் தண்ணீரும் இறைத்து பிண்டம் வைக்கக் கூடாது.

முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்கும் போது ராகு காலம், எமகண்டம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், முன்னோர்களுக்குப் படையல் போடும் போது ராகு காலம், எமகண்டம் இருக்கக் கூடாது. அதேபோல், முன்னோர்களின் வழிபாடு முடியும் வரை வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றக் கூடாது.

செய்ய வேண்டியவை:

அமாவாசைக்கு முதல் நாளே வீட்டைச் முழுமையாகச் சுத்தம் செய்துவிட வேண்டும். மகாளய அமாவாசை அன்று அதிகாலையிலேயே எழுந்து சுத்தமான நீரில் நீராடிய பிறகு, நம் முன்னோர்களுக்கு முறைப்படி தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

வீட்டில் விளக்கேற்றி முன்னோர்களுக்குப் படைத்த பிறகு, காகத்திற்கு கிழக்கு பார்த்தவாறு சாதம் வைக்க வேண்டும். காகம் சாப்பிட்ட பிறகே நாம் உணவு உட்கொள்ள வேண்டும்; காகமாக வந்து முன்னோர்கள் நமது வழிபாட்டை ஏற்றுக்கொள்வதாக ஐதீகம்.

ஏழை எளிய மக்களுக்கு உங்களால் முடிந்த பொருளுதவி மற்றும் அன்னதானம் வழங்குவது முன்னோர்களின் பசியைத் தீர்த்து ஆசியைப் பெற்றுத் தரும்.

அமாவாசை பித்ரு தர்ப்பணம்

ஜீவராசிகளுக்கு உதவுதல்: மகாளய அமாவாசை அன்று பசுக்கள், நாய்கள் மற்றும் காகங்கள் போன்ற ஏதேனும் இரு ஜீவராசிகளுக்கு கண்டிப்பாக உணவு அளிக்க வேண்டும்.

உங்களிடம் முன்னோர்களின் புகைப்படம் இல்லை என்றால், தெற்கு பார்த்தவாறு ஒரு அகல் விளக்கு மட்டும் ஏற்றி வைத்து வழிபாடு செய்யலாம்.

மகாளய அமாவாசை அன்று மாலை 6 மணிக்கு மேல் உங்கள் வீட்டின் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று முன்னோர்களை வேண்டி நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். முடிந்தால் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபடுவது முழுமையான பலனைத் தரும்.