பகீர்... 3 பேர் செல்லும் ஆட்டோவில் 17 பள்ளி மாணவர்கள்! அதிர்ச்சி வீடியோ!

 
auto

 

மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் மூன்று பேர் பயணிக்கக்கூடிய ஆட்டோ ரிக்ஷாவில் 17 பள்ளி மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.பிவாண்டியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோவை ஒருவர் வழிமறித்துள்ளார். ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக குழந்தைகள் இருப்பதை பார்த்த அவர், ஓட்டுநரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார். பின்னர் குழந்தைகளை ஆட்டோவில் இருந்து கீழே இறங்குமாறு கூறி, அவர்களை ஒருபுறமாக நிற்க வைத்துள்ளார்.

அந்த ஆட்டோவில் சில குழந்தைகள் ஓட்டுநருக்கு அருகிலும், 6 முதல் 7 குழந்தைகள் பின்புறத்திலும் அமர்ந்திருந்ததாகவும், மேலும் 2 முதல் 3 குழந்தைகள் பின்புறம் பொருட்களை வைப்பதற்காக உள்ள பகுதியில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குழந்தைகளை ஏன் இவ்வளவு அதிகமாக அழைத்துச் செல்கிறீர்கள் என அந்த நபர் கேள்வி எழுப்பியபோது, ஓட்டுநர் விளக்கம் அளித்துள்ளார். வழக்கமாக 15 குழந்தைகளை அழைத்துச் செல்வதாகவும், அன்று கூடுதலாக சில குழந்தைகள் வந்ததால் 17 பேர் ஆனதாகவும் அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இதுபோன்று மீண்டும் செய்யமாட்டேன் என்றும் ஓட்டுநர் உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய ஆட்டோவில் 17 குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டதால், விபத்து ஏற்பட்டால் குழந்தைகள் உடனடியாக வெளியேறுவதில் சிரமம் ஏற்படலாம் என்ற பாதுகாப்பு கேள்விகளும் எழுந்துள்ளன.இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்ற நிலையில், பிவாண்டி போக்குவரத்து போலீசார் ஆட்டோ ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் தனியார் வாகனங்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

NewsX World on X: "1, 2,3....17...Schoolchildren Packed Into One Auto-Rickshaw in Maharashtra | Watch Video👇 https://t.co/jSjgUP8EI7 #Maharashtra # SchoolChildren #AutoRickshaw #RoadSafety" / X

பள்ளி பேருந்து கட்டணம் உள்ளிட்ட காரணங்களால் சில குடும்பங்கள் தனியார் ஆட்டோக்களை பயன்படுத்துவதாகவும், பள்ளி போக்குவரத்து வசதி இல்லாத இடங்களில் உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்களை பெற்றோர் நம்பியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்களின் போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்வதில் பெற்றோர், பள்ளி நிர்வாகம் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளின் கண்காணிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.