காதலை முறித்த ஆத்திரம்... காதலி வீட்டுக்கு முன்னாள் காதலன் பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு!
மகாராஷ்டிரா மாநிலம் டோம்பிவிலியில் ஏழு ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த காதல் உறவை இளம்பெண் ஒருவர் முறித்துக் கொண்ட ஆத்திரத்தில், முன்னாள் காதலன் அவரது வீட்டுக்குத் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபேஷ் என்ற இளைஞர் இந்தச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்து வரும் வீட்டின் நுழைவுக் கதவில் தீபேஷ் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துள்ளார். தீ பரவியதைக் கவனித்த குடும்பத்தினர் உடனடியாகச் செயல்பட்டுத் தீயை அணைத்ததால், அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக இருந்த தீபேஷை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், அவரைக் கைது செய்த போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.காதல் முறிவு காரணமாக நடந்த இந்தத் தீ வைப்புச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
