மராத்தி தெரியலைன்னா ஓட்டுநர் உரிமம் ரத்து - மகாராஷ்டிர அரசு கடும் எச்சரிக்கை!
மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்டோ, டாக்ஸி மற்றும் செயலி மூலம் இயக்கப்படும் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு மராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டியதை கட்டாயமாக்கி மாநில அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. பயணிகளிடம் உரையாடும் அளவுக்குப் போதிய மராத்தி மொழி அறிவு இல்லாத ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமம் 3 மாதங்கள் வரை இடைநீக்கம் செய்யப்படும். விதிமுறைகளைத் தொடர்ந்து மீறும் ஓட்டுநர்களுக்கு அவர்களின் ஓட்டுநர் உரிமம் மற்றும் அனுமதிச் சீட்டு நிரந்தரமாக ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது.
மகாராஷ்டிர மோட்டார் வாகன விதிகள், 1989-இல் செய்யப்பட்டுள்ள திருத்தங்களின்படி இந்த நடவடிக்கை அமல்படுத்தப்படுகிறது. மராத்தி மொழி அறிவு குறித்த புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைகள் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் தீவிரப்படுத்தப்பட உள்ளன.

இது குறித்துப் பேசிய மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக், பயணிகள் மற்றும் ஓட்டுநர்களுக்கிடையேயான தொடர்பை மேம்படுத்தவும், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் உள்ளூர் மொழி அறிவு அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மும்பை டார்டியோ ஆர்டிஓ அலுவலகம் உட்படப் பல இடங்களில் மராத்தி மொழித் தேர்வ எழுதவும் சான்றிதழ் பெறவும் நூற்றுக்கணக்கான ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் குவிந்து வருகின்றனர்.
