இனி வாரத்திற்கு 48 மணி நேரம்தான் வேலை! ஓவர் டைமுக்கு இரட்டிப்பு சம்பளம்… தொழிலாளர்களுக்கு புதிய விதிகள்!
மராட்டிய மாநிலத்தில் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் வேலை நேரம், குறைந்தபட்ச ஊதியம், வாராந்திர ஓய்வு, கூடுதல் நேரப் பணி ஊதியம் உள்ளிட்டவற்றை ஒழுங்குபடுத்தும் புதிய விதிகளை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.
‘மராட்டிய ஊதிய விதிகள் 2026’ என்ற பெயரில் கடந்த நவம்பர் 5-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்ட இந்த விதிகள், ஊதியச் சட்டம் 2019-ன் கீழ் வரும் தொழிலாளர்களுக்குப் பொருந்தும். இதன்படி, தினக்கூலி அடிப்படையில் பணிபுரிபவர்களுக்கு ஒரு நாளின் வழக்கமான வேலை நேரம் 8 மணி நேரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற ஊதியக் கால அடிப்படையில் பணிபுரிபவர்களுக்கு வார வேலை நேரம் 48 மணி நேரத்தைத் தாண்டக்கூடாது.
ஒவ்வொரு தொழிலாளிக்கும் வாராந்திர ஓய்வு வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஓய்வு நாளில் பணிபுரிந்தால் மாற்று விடுமுறை வழங்க வேண்டும். அந்த நாளுக்கான கூடுதல் நேர ஊதியம் சாதாரண ஊதியத்தைவிட குறைந்தது இரு மடங்காக இருக்க வேண்டும்.

மேலும், ஒரு ஊதியக் காலத்தில் தொழிலாளியின் சம்பளத்தில் 50 சதவீதத்துக்கு மேல் பிடித்தம் செய்யக் கூடாது. அபராதம் அல்லது இழப்பீடு பிடித்தம் செய்வதற்கு முன்பு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க வேண்டும். ஊதியம், வருகை மற்றும் கூடுதல் நேரப் பணி பதிவுகளை 5 ஆண்டுகள் பராமரிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இந்த விதிகள் மராட்டிய மாநில அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய நிர்ணயத்திற்குப் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
