180 பெண்கள்.. 350 ஆபாச வீடியோக்கள்... கைதான முகமது அயாஸின் வீடு இடிப்பு - பொதுமக்கள் ஆவேசம்!
மராட்டிய மாநிலம் அமராவதி அருகே இளம்பெண்களை வலைவீசி ஆசை வார்த்தைப் பேசி, ஆபாச வீடியோ எடுத்துப் பாலியல் தொழிலுக்கு மிரட்டிய முகமது அயாஸ் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ், வாட்ஸ்அப் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளிடம் நெருங்கிப் பழகியுள்ளார். ஆசை வார்த்தைகளைக் கூறி அவர்களைத் தனியாக வரவழைத்துச் சில்மிஷத்தில் ஈடுபட்டு, அவற்றை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோக்களைக் காட்டி அந்தப் பெண்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு மிரட்டியதோடு, சில வீடியோக்களை இணையத்திலும் கசியவிட்டுள்ளார்.
மாநிலங்களவை எம்.பி. அனில் போண்டே அளித்த புகாரின் அடிப்படையில், எஸ்பி விஷால் ஆனந்த் தலைமையிலான போலீசார் முகமது அயாஸைக் கைது செய்தனர். போலீசார் அவரது செல்போனைச் சோதித்த போது, சுமார் 180 சிறுமிகளின் 350க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். நீதிமன்றம் அவரை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்தக் கொடூரச் செயலால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கடும் நடவடிக்கை கோரினர். இதனைத் தொடர்ந்து, பரத்வாடா பகுதியில் உள்ள முகமது அயாஸின் வீடு சட்டவிரோத ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருப்பதாகக் கூறி, மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் இன்று வீட்டின் ஒரு பகுதியை இடித்துத் தள்ளினர். பாஜக எம்.எல்.ஏ பிரவீன் தயாடே முன்னிலையில் இந்த இடிப்புப் பணி நடைபெற்றது. தற்போது இந்த வழக்கை விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என எம்.பி. அனில் போண்டே வலியுறுத்தியுள்ளார்.
