அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களே உஷார்... இரும்பு சறுக்கு மரம் சரிந்து விழுந்து 7 வயது சிறுமி பலி!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் ஹடப்சர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் விளையாடச் சென்ற 4 வயது சிறுமி, விளையாட்டு உபகரணம் தலையில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி மதியம் குடியிருப்பு வளாகத்தில் உள்ள பூங்காவில் அந்தச் சிறுமி மற்ற குழந்தைகளுடன் உற்சாகமாக விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த கனமான இரும்பு சறுக்கு மரம் திடீரென அடியோடு பெயர்ந்து அந்தச் சிறுமியின் தலையிலேயே விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர், அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்குச் சிகிச்சை பலனின்றி அந்தச் பிஞ்சு உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
குடியிருப்பு வளாகத்தில் உள்ள விளையாட்டு உபகரணங்களைச் சரியாகப் பராமரிக்காததே இந்த விபத்திற்குக் காரணம் என்று சிறுமியின் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. துருப்பிடித்துப் பலவீனமாக இருந்த இரும்புச் சறுக்கு மரத்தை அகற்றாமல் அலட்சியமாக இருந்ததாகக் கூறி, அந்தத் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த ஹவுசிங் சொசைட்டியின் தலைவர் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் மீது கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முறையான பாதுகாப்புத் தணிக்கை செய்யாமல் குழந்தைகளை விளையாட அனுமதித்தது மிகப்பெரிய தவறு என்று அந்தப் பகுதி மக்கள் ஆத்திரத்துடன் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள மற்ற அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் பெற்றோரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோடை விடுமுறை தொடங்கிவிட்ட நிலையில், குழந்தைகள் மாலை நேரங்களில் பூங்காக்களில் விளையாடும்போது உபகரணங்களின் உறுதித்தன்மையைச் சரிபார்க்க வேண்டியது அவசியமாகிறது. இது போன்ற விபத்துக்கள் இனிமேல் நடக்காமல் இருக்கப் பூங்கா நிர்வாகம் மற்றும் குடியிருப்புச் சங்கங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். ஒரு சிறிய அலட்சியம் ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியையே பறித்துவிட்ட இந்தச் சம்பவம், விளையாட்டுத் திடல்களில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
