9-வது திருமணத்திற்கு ஸ்கெட்ச்... 8 கணவர்களை ஏமாற்றிய கில்லாடி கொள்ளைக்காரி !
மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்தடுத்து 8 ஆண்களை ஏமாற்றித் திருமணம் செய்து, நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த 35 வயது இளம்பெண் ஒருவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். புரோக்கர்களின் உதவியுடன் பெண் கிடைக்காத கிராமப்புற வாலிபர்களைக் குறிவைத்து இந்த மோசடி கும்பல் கைவரிசை காட்டி வந்துள்ளது. ஒவ்வொரு திருமணமான ஒரே வாரத்தில் வீட்டில் உள்ள நகை, பணத்தைச் சுருட்டிக்கொண்டு அந்தப் பெண் தலைமறைவாவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
இந்த நூதன மோசடி மூலம் 15 முதல் 20 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஏராளமான தங்க நகைகளை அந்தப் பெண் மற்றும் அவரது கூட்டாளிகள் திருடியுள்ளனர். திருமணத்தின் போது உறவினர்களாக நடித்தவர்கள் அனைவரும் பணம் கொடுத்து அமர்த்தப்பட்ட போலி நபர்கள் என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்நிலையில், உமாபூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரை 9-வது முறையாகத் திருமணம் செய்ய முயன்ற போது, அந்தப் பெண்ணின் முன்னுக்குப் பின் முரணான பேச்சால் மணமகன் வீட்டாருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்துத் தகவல் கிடைத்து வந்த போலீசார் நடத்திய சோதனையில், அந்தப் பெண்ணிடம் முறையான அடையாள அட்டைகள் இல்லாதது உறுதி செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இவருடன் இணைந்து செயல்பட்ட தலைமறைவாக உள்ள ஏஜெண்டுகளைப் போலீசார் தற்போது தீவிரமாகத் தேடி வருகின்றனர். மணப்பெண்ணின் ஆதார் விவரங்கள் மற்றும் குடும்பப் பின்னணியைத் தீர விசாரித்த பின்னரே திருமணங்களைச் செய்ய வேண்டும் எனப் பீட் மாவட்ட போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
