மும்பையில் பரபரப்பு: மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி கைது!

 
காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி டெல்லியில் 'காக்ரோச் ஜனதா கட்சி'  நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, மும்பை ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் 'சலே ஜாவோ' (வெளியேறு!) போராட்டத்தை நடத்தத் திட்டமிட்ட மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரனும், 'ஹம் பாரத் கே லோக்' அமைப்பின் தலைவருமான துஷார் காந்தியை மும்பை காவல்துறையினர் தடுப்புக் காவலில் எடுத்துள்ளனர்.

பாந்த்ரா சாண்டா குரூஸ் பகுதியில் உள்ள நேஷனல் காலேஜ் சந்திப்பில் வைத்து துஷார் காந்தி மற்றும் அவரது அமைப்பைச் சேர்ந்தவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்திப் பிடித்தனர். பின்னர் அவர் டி.என். நகர் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்.

தான் கைது செய்யப்பட்ட போதிலும் ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் நடைபெற உள்ள போராட்டம் எந்தவிதத் தடையுமின்றித் தொடரும் என்றும், மக்கள் அனைவரும் போராட்ட இடத்திற்கு வருமாறும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முறையான அனுமதி பெறப்படாததாலும், உயர் நீதிமன்ற உத்தரவுகளின்படி குறிப்பிட்ட இடங்களில மட்டுமே போராட்டம் நடத்த அனுமதி உள்ளதாலும் சட்டம்-ஒழுங்கைப் பேணிக் காக்கும் பொருட்டு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்போராட்டத்தோடு தொடர்புடைய வேறு சில அமைப்பாளர்களையும் காவல்துறையினர் முன்கூட்டியே தடுத்து நிறுத்தியுள்ளனர்.