காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு...19 வயது மகளைச் சுட்ட தந்தை !
உத்தரப் பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டத்தில், காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை தனது 19 வயது மகளைத் துப்பாக்கியால் சுட்டதாகப் புகார் எழுந்துள்ளது. படுகாயமடைந்த ஷாசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவரது தந்தை ஆசின் கானை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமண ஏற்பாட்டால் தகராறு
கூலித் தொழிலாளியான ஆசின் கான், மகள் ஷாசியாவுக்கு நவம்பர் 19-ம் தேதி வேறொரு நபருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தான் காதலித்த நபரையே திருமணம் செய்ய வேண்டும் என ஷாசியா விரும்பியதால் தந்தை, மகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
தந்தை கைது
நள்ளிரவில் ஷாசியா தூங்கிக்கொண்டிருந்தபோது அவரது தந்தை துப்பாக்கியால் சுட்டதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சத்தம் கேட்டு வந்த அவரது தாய் கேருனிஷா, மகளை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவத்தின் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
