மகர ஜோதி... ஐயப்ப பக்தர்களுக்காக பம்பைக்கு நேரடியாக திருவனந்தபுரம், கொச்சி விமான நிலையங்களில் இருந்து ஏ.சி. பேருந்துகள் அறிவிப்பு!

 
சபரிமலை இருமுடி பெரிய பாதை நடைப்பயணம் யாத்திரை

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, திருவனந்தபுரம் மற்றும் கொச்சி விமான நிலையங்களில் இருந்து பம்பைக்கு நேரடி ஏ.சி. பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் இந்த பஸ் சேவையை, அம்மாநில போக்குவரத்துத்துறை மந்திரி ஜான் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அப்போது சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இருந்து விமானங்களில் வந்த குழந்தைகள் உள்பட பக்தர்களை வரவேற்று, அவர்களுக்கு மலர்களையும் ஐயப்பன் படங்களையும் வழங்கினார்.

ஐயப்பன் சபரிமலை இருமுடி

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து பம்பைக்குச் செல்ல ரூ.340 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொச்சி நெடும்பாசேரி விமான நிலையத்தில் இருந்து பம்பைக்குச் செல்ல ரூ.380 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த பஸ் சேவையை விமானப் பயணிகள் மட்டுமின்றி, முன்பதிவு செய்யும் அனைத்துப் பயணிகளும் பயன்படுத்திக்கொள்ளலாம். பக்தர்களின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ் சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் போக்குவரத்துத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

சபரிமலை

மேலும், தனிநபர்கள், குடும்பத்தினர் மற்றும் குழுவாக சபரிமலைக்குச் செல்ல விரும்புவோர் அரசு பஸ்களை முன்பதிவு செய்துகொள்ளலாம். பயணிகளின் எண்ணிக்கை, ஏறும் இடம், பயணத் தேதி, நேரம் மற்றும் பயணத்தின் கால அளவு ஆகியவற்றின் அடிப்படையில் பஸ் வசதி ஏற்பாடு செய்யப்படும். பக்தர்கள் தங்களது வசிப்பிடங்களில் இருந்து நேரடியாக பம்பைக்குச் சென்று, மீண்டும் அதே இடத்துக்குத் திரும்பும் வகையிலும் இந்தச் சேவை திட்டமிடப்பட்டுள்ளது